கொழும்பு:
கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு குறித்து வெளியாகும் பல்வேறு கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அண்மையில் மதுரையில் தவெக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதல்களுக்கு ஆளாகினர் என்றும் அதற்குத் தீர்வாக கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுகுறித்து இலங்கை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தென்னிந்தியாவில் தேர்தல் காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
“தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பார்கள். அப்படித்தான் கச்சத்தீவு குறித்தும் பேசுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.
அரசு மட்டத்தில் யாராவது கருத்து தெரிவித்திருந்தால், அதன் மீது கவனம் செலுத்தலாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்றார்.
கச்சத்தீவு குறித்து விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை தாம் பார்த்ததாகவும் அதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
“இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான்,” என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.