Last Updated:
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் சொந்தமாக வீடு வாங்குவதற்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் நன்மைகள் இருப்பது போலவே சில சிக்கல்களும் உள்ளன.
இந்தியாவில் முதிய வயதினரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் உலகின் முதியோர் மக்கள் தொகையில் 17% பேர் இந்தியாவில் இருப்பார்கள் என்றும் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவை முதிய வயதினரைக் கொண்ட சமூகத்தின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கடன் வழங்கும் அமைப்பில் ஒரு மாற்றத்தையும் குறிக்கிறது. தற்போது நிதி நிறுவனங்கள் முதிய வயதினருக்கு கடன் வழங்குவதற்கு தயாராகி வருவதைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் சொந்தமாக வீடு வாங்குவதற்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் நன்மைகள் இருப்பது போலவே சில சிக்கல்களும் உள்ளன. பொதுவாக மூத்த குடிமக்களுக்கான வீட்டுக் கடன்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளன.
பணிபுரியும் நபர்களுடன் ஒப்பிடும்போது, குறுகிய கடன் காலங்கள் மற்றும் குறைந்த கடன் தொகைக்கான அணுகல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஓய்வூதியதாரருக்கான கடன்கள், அவர்களின் ஓய்வூதிய வருமானத்தை நம்பகமான நிதி ஆதாரமாகக் கருதுவதால், தளர்வான அளவுகோல்களையும் சற்று குறைந்த வட்டி விகிதங்களை வழங்கக்கூடும்.
மற்றொரு ஆப்ஷன் ரிவர்ஸ் மார்டேஜ். இது மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளை விற்காமலேயே அதன் மதிப்பைப் பெற அனுமதிக்கிறது. இது நிலையான வருமானத்தை உருவாக்க உதவும் என்றாலும், கடன் இருப்பு வளர்ந்து வீட்டின் மதிப்பைவிட அதிகமாகும் வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கை தேவை. ரிவர்ஸ் மார்டேஜ் என்பது மூத்த குடிமக்களுக்காக (பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) வடிவமைக்கப்பட்ட சிறப்பு வகை வீட்டுக் கடனாகும்.
இது ஓய்வு பெற்றவர்களுக்கு வழக்கமான வருமானம் இல்லாவிட்டாலும், தங்கள் வீட்டை ஒரு வங்கி அல்லது கடன் வழங்குநரிடம் அடமானம் வைக்க அனுமதிக்கிறது. இதில் நீங்கள் இஎம்ஐ செலுத்துவதற்குப் பதிலாக, வங்கி உங்கள் வீட்டின் மதிப்பைப் பயன்படுத்தி, மொத்தத் தொகையாகவோ, மாத வருமானமாகவோ அல்லது பகுதி தொகையாகவோ உங்களுக்குச் செலுத்துகிறது.
ஒரு மூத்த குடிமகனாக, நீங்கள் வீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பினால், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
750 அல்லது அதற்கு மேல் என்ற வலுவான கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கவும்
- உங்களுடன் இன்னொரு விண்ணப்பதாரரை சேர்ப்பதை கருத்தில் கொள்ளுங்கள். கூடுமானவரை நிலையான வருமானம் கொண்ட இள வயது குடும்ப உறுப்பினரைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். இது உங்கள் கடன் தகுதியை மேம்படுத்தலாம் மற்றும் கடன் காலத்தை நீட்டிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
- உங்களுக்கு வேறு எந்தக் கடனும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் இல்லாத விண்ணப்பதாரர்களையே விரும்புகிறார்கள்.
- ஓய்வூதியம், டிவிடெண்ட், வாடகை வருமானம், ஆலோசனைக் கட்டணங்கள் போன்ற தெளிவான வருமான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். நிலையான பணப் புழக்கங்கள் உங்கள் தகுதியை அதிகரிக்கும்.
- உங்கள் வயதுக்கு ஏற்ப குறுகிய திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்வு செய்யவும். பொதுவாக அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது 75 வயதிற்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
- வீடு வாங்குவதற்கு மானியங்களை வழங்கும் மூத்த குடிமக்கள் வீட்டுவசதி திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பல்வேறு வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டறிந்து, அதன் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் போன்ற காரணிகளை ஒப்பிட்டு உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்வு செய்யவும்.
October 19, 2025 3:05 PM IST
ஓய்வூதியம் பெறுவோர் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா…? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்…!