பெங்களூரு: மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்தான் அவரது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கும் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலிக்கு, அந்த தொடர் பசுமையான நினைவாக அமையவில்லை. மொத்தமே 190 ரன்கள் தான் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 23.75.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிகழ்வில் பங்கேற்ற கோலி இதை தெரிவித்தார். “மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாது என நினைக்கிறேன். அதனால் கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி எனக்கு வருத்தம் இல்லை.
ஓய்வுக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. அண்மையில் இதே கேள்வியை சக அணி வீரரிடம் நான் கேட்டேன். அவரும் இதே பதிலை தான் கொடுத்தார். ஆனால், நிறைய பயணம் செய்யலாம்” என கோலி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து 36 வயதான கோலி ஓய்வு பெற்றிருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி வருகிறார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி, 9230 ரன்கள் எடுத்துள்ளார். 30 சதங்கள் இதில் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1542 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்கள் எடுத்துள்ளார்.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில், கோலி இப்படி பேசியுள்ளது 2027-ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.