
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் KL Rahul, ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராகவும் பொறுப்பேற்று வருகிறார். இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் Kevin Pietersen, ராகுலிடம் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கே.எல். ராகுல், “ஒருவர் தன்னிடம் நேர்மையாக இருந்தால், ஓய்வு எப்போது வர வேண்டும் என்பதும் இயல்பாகவே தீர்மானமாகும். அதை தேவையில்லாமல் தள்ளிப்போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் சிறிது காலம் இருக்கிறது. அதைப் பற்றி நான் சிந்தித்திருக்கிறேன், ஆனால் அது மிகவும் கடினமான முடிவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் அவர், “நம் நாட்டிலும் உலகளாவிய அளவிலும் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். ஆனால் வாழ்க்கையில் கிரிக்கெட்டைவிட முக்கியமான விஷயங்களும் உள்ளன. இந்த எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததே. குறிப்பாக என் முதல் குழந்தை பிறந்ததற்கு பிறகு, வாழ்க்கையை நான் பார்க்கும் கோணமே முற்றிலும் மாறிவிட்டது” என்று கூறினார்.
33 வயதான கே.எல். ராகுல் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 4,053 ரன்களை 35.8 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். 94 ஒருநாள் போட்டிகளில் 3,360 ரன்களை 50.9 சராசரியுடன் அடித்துள்ள அவர், 72 டி20 போட்டிகளில் 2,265 ரன்களை 37.75 சராசரியுடன் பதிவு செய்துள்ளார்.

