Last Updated:
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவிநீக்கம் செய்யக் கோரிய மசோதா மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெறுகிறது. இந்தியா கூட்டணி 118 எம்பிக்கள் தீர்மானத்தை மக்களவை செயலளரிடம் வழங்கினர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மசோதா மீதான விவாதம் மக்களவையில் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்ட அமர்வு திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுத்தது தொடர்பாக கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் நீக்கப்பட்டனர்.
மேலும், எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்ளத் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா வெளிப்படையாகவே அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் 118 பேர் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவை செயலளரிடம் வழங்கினர்.
இந்நிலையில், இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் திங்கட்கிழமை மக்களவையில் நடைபெறுகிறது. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஓம் பிர்லா அவையை வழிநடத்தாமல் ஆளுங்கட்சி எம்பிக்கள் வரிசையில் அமர்ந்து தீர்மானத்தை கவனிப்பார்.
மேலும், தீர்மானத்தை தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சித் தரப்பில் குறைந்து 50 பேர் எழுந்து நின்று தீர்மானத்திற்கு ஆதரவை தந்தால் மட்டுமே அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


