Last Updated:
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், ஓமன் நாட்டின் கடற்படை மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்த மாலுமிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர்
ஓமன் கடற்பகுதிக்கு அருகில் உள்ள ‘ஹார்முஸ் நீரிணை’ வழியே சென்று கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய ‘எம்.டி ஆன் பீஸ்’ (MT On Peace) என்ற வணிகக் கப்பல் மீது ஏவுகணை அல்லது அடையாளம் தெரியாத பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 12 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான ‘எம்.டி ஆன் பீஸ்’ வணிகக் கப்பலில் மொத்தம் 19 மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 17 பேர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கப்பலின் பகுதிகள் சேதமடைந்ததுடன், அதிலிருந்த 12 ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 பேர் இந்தியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், ஓமன் நாட்டின் கடற்படை மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்த மாலுமிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஓமனில் உள்ள ‘கசாப்’ பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவாகச் செயல்பட்டு உதவிகளை வழங்கிய ஓமன் அரசுக்கு இந்திய அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சர்வதேசக் கடல் வழிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நீர்வழிகளில் வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

