Last Updated:
திங்கள் கிழமை இரவு வழக்கம்போல் பயணிகளுடன் நிஜாமாபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மறுநாள் அதிகாலை ஒன்றரை மணிக்கு குத்தி ரயில் நிலையம் அருகே வந்து சேர்ந்தது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்த ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் பயணிகளிடமிருந்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. திங்கள் கிழமை இரவு வழக்கம்போல் பயணிகளுடன் நிஜாமாபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மறுநாள் அதிகாலை ஒன்றரை மணிக்கு குத்தி ரயில் நிலையம் அருகே வந்து சேர்ந்தது. அங்கு சிக்னலுக்காக ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.
இதற்காகவே தயாராக காத்திருந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரயிலுக்குள் புகுந்துள்ளது. கத்தி, கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் பயணிகளை கத்தி முனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட ரயில் திருப்பதி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. திருப்பதியில் ரயில்வே போலீசாரிடம் ரயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மொத்தமாக பறிபோன பணம், நகை ஆகியவற்றை கணக்கிட்டு வருகின்றனர். இந்த செயல் வட மாநில கொள்ளையர்களின் அட்டூழியமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட இடத்தில் சிக்னலுக்காக நிறுத்தப்படுவதை தொடர்ந்து கண்காணித்து திட்டம் போட்டு கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் ரயிலுக்குள் புகுந்து அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 30, 2025 6:13 PM IST


