புறப்பட தயாராகும் ரயிலில் இருக்கும் பயணியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, திருடர்களிடம் ஜாக்கிரதை என்று அறிவிக்கப்படுவதை கேட்டிருப்பீர்கள். அதேபோல், பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஆங்காங்கே புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளையும் பார்த்திருப்பீர்கள். ஏனெனில், இதுபோன்ற இடங்களில்தான் திருடர்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருக்கும். இருப்பினும், இவற்றையெல்லாம் மீறியும் திருட்டு மற்றும் வழிப்பறி நடக்கத்தான் செய்கிறது.
எனவே, ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும்போது ஜன்னல் அருகே அமரும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். மேலும், எளிதில் எடுக்கும் வகையில் சார்ஜ் போட வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். அதேபோல், பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு ஜன்னலோரம் அமர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர். ஏனெனில் திருடர்கள் இதுபோன்ற நபர்களைத் தான் குறிவைக்கிறார்கள்.
இப்படித்தான், ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் செல்போனை பறித்துச் செல்லும் வீடியோ, ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. சோசியல் மீடியாவில் வைரலாகும் இந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அதன் அருகிலேயே நடைமேடையில் ஒரு சிறுவன் நடந்து செல்கிறான். ரயிலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஒருவரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறான். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் சத்னா ரயில் நிலையம் என்று பதிவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ள நிலையில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதில் கருத்து பதிவிட்டுள்ள பலர், இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிலர், வீடியோவை பதிவு செய்த நபர், திருடனை பிடிக்க ஏன் உதவி செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு சிலர், திருடனுக்கும், வீடியோவை பதிவு செய்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
