30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது பிறப்புறுப்பில் காயத்துடன், கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகராட்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தான் மும்பைக்கு ரயில் வந்தபோது மர்ம நபர் ஒருவர் தன்னை ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த மும்பை காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த இளம் பெண் உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. மேலும், அந்த ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் அவர் பயணித்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
காவல்துறையின் தொடர் விசாரணையில், ரயிலில் இளம் பெண் கழிவறைக்குச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, கழிவறையில் அவரை அடைத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரியவந்தது.
ரயிலில் இந்தச் சம்பவம் நடந்ததால், மாநகர் காவல்துறையினர் உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினர். இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்தபோது, தனது பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்பதால் இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
ரயில் குற்றச்சம்பவம் நடந்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், ரயில்வே காவல்துறை தாமாக முன்வந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது.
விசாரணையைத் துவங்கிய ரயில்வே காவல்துறை, ரயில் நிலையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. அதில், அந்த இளம் பெண் சொன்ன முதல் பொய் வெளிச்சத்திற்கு வந்தது. சிசிடிவியில், ஜூலை 12ஆம் தேதி அந்தப் பெண் ஒரு இளைஞருடன் ரயிலில் பயணித்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரயில்வே காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தியபோது, இந்தச் சம்பவத்திற்குப் பின் இருந்த மோசமான பின்னணி தெரியவந்தது. ரயில்வே காவல்துறையின் விசாரணையில், அந்தப் பெண் மும்பைக்கு ரயிலில் ஒரு இளைஞருடன் பயணம் செய்து, அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
மேலும், இளம் பெண் தனது ஆண் நண்பருடன் ஓட்டல் அறையில் தனிமையில் இருந்ததாலே அவருக்குப் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டதையும், தனது ஆண் நண்பரின் அடையாளத்தை இந்தச் சம்பவத்தில் மறைப்பதற்காகவே பொய்யாக ஓடும் ரயிலில் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண், சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இதனால், ரயில்வே காவல்துறையினர் இந்தப் புகார் பொய் புகார் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
August 06, 2025 7:00 PM IST

