Last Updated:
கேரம் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழக வீராங்கனை கீர்த்தனா. ஒழுகும் வீட்டில் வசித்து, கனவை வென்றெடுத்துள்ளார் இளம்வீராங்கனை.
சர்வதேச கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதங்களை தட்டித்தூக்கி, தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழ்நாட்டின் தங்க மகள் கீர்த்தனா. சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 21 வயதான இளம் கேரம் வீராங்கனை கீர்த்தனா. வீட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த கீர்த்தனாவின் தந்தை கடந்த 2017-ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது முதல், வீட்டு வேலை செய்து இரு மகன்களையும், ஒரு மகளையும் வளர்த்து வருகிறார் கீர்த்தனாவின் தாய் இந்திராணி.
ஒழுகும் வீட்டில், ஏழ்மையின் பிடியில் சிக்கி தவித்தாலும், கேரம் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்ற பக்கபலமாக இருந்து வருகிறார் தாய் இந்திராணி. கேரம் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற மகளின் சாதனைகளைப் பூரிப்போடு நியூஸ் 18-இடம் எடுத்துரைத்தார் இந்திராணி.
ஒழுகும் வீடு என்பதால், மகள் வென்ற கோப்பைகள், பதக்கங்கள் மழையில் நனையாதபடி, பாதுகாத்தும் வைத்துள்ளார். கேரம் ஃபோர்டில் காயின்களை அடித்து சிதறடிப்பது போல, தன்முன்பு இருந்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலக சாம்பியன் போட்டிக்கு தேர்வானார் கீர்த்தனா.
தடைகளைத் தாண்டி, சாதனைகள் பல படைத்த அவருக்கு பொருளாதாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது… மகளை எப்படி மாலத்தீவு அனுப்பி வைப்பது என செய்வதறியாது தவித்த அவரது தாய்க்கு கரம் கொடுத்தது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஸ்டாலின், விளையாடுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. சங்கர் உள்ளிட்டோரின் உதவியுடன் மாலத்தீவு பறந்த கீர்த்தனா, சர்வதேச கேரம் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவு என மூன்றிலும் தங்கப் பதங்கங்களைத் தட்டித் தூக்கினார்.
சென்னை வந்த கீர்த்தனா உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கப் பதக்க கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசு, தனது விருப்பதையும் நிறைவேற்றும் என்பது கீர்த்தனாவின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக உள்ளது.
Chennai,Tamil Nadu
December 08, 2025 8:44 AM IST
ஒழுகும் வீடு.. ஏழ்மையில் தவிப்பு.. தடைகளை தகர்த்து கேரம் போட்டியில் தங்க பதக்கங்களை குவித்த தமிழக வீராங்கனை கீர்த்தனா


