Last Updated:
இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஃபத்தா ஹைபர்சானிக் உள்ளிட்ட ஏவுகணை மழை பொழிந்து பதறச் செய்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 8 ஆவது நாளை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரம் டிரோன்களை ஈரான் ஏவிய நிலையில், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து அழித்துள்ளது. அதைத்தொடர்ந்து தாக்குதல் உத்தியை மாற்றியுள்ள ஈரான் இதுவரை பயன்படுத்தாத ஹைபர்சோனிக் ஏவுகணைகளை களமிறக்கியுள்ளது.
ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் மணிக்கு 6500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஃபத்தா-1 ஹைபர்சோனிக் ஏவுகணை மற்றும் செஜ்ஜில் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை ஈரான் திணறடித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் ஈரானின் நடான்ஸ் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட வெறும் 7 நிமிடத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை தாக்கும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் காற்றில் இருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளதோடு, மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்வதால் அவை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவலாக அமைந்துள்ளது. குறிப்பாக ஈரான் நேற்று வீசிய ஏவுகணையில் ஒன்று பல வெடிகுண்டுகளுடன் கூடிய ஏவுகணை என்று தெரிகிறது. இந்த ஏவுகணை விழும் நேரத்தில் பல்வேறு பாகங்களாக பிரிந்து விழுந்ததாகவும், அவற்றை தொட்டால் வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தெற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சொரோகா மருத்துவமனை கட்டடம் பலத்த சேதமடைந்தது. இதில், 47 பேர் காயமடைந்தனர். ல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானது. இதேபோன்று டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. இதெல்லாம் இஸ்ரேலுக்கு புதிது என்பதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொரோகா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிறைய உதவிகளை செய்திருப்பதாகக் கூறினார். ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவும் நெதன்யாகு உத்தரவிட்டார். ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி இனி இருக்கவே கூடாது என்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கான இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் நடான்ஸ் மற்றும் அரக் அணு சக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள ஏவுகணைகளை ஏவும் தளங்களில் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டால், செர்னோபில் போன்று பேரழிவை ஏற்படுத்தும் என்று அதனை வடிவமைத்த ரஷ்யா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் தலையீட்டிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
June 20, 2025 7:39 AM IST
ஒலியை விட 5 மடங்கு வேகம்… ஹைப்பர்சோசானிக் ஏவுகணையை செலுத்தி இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்


