சிப்பாங், ஜனவரி 12:
2026-ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு, மலேசிய ஒற்றுமை பாலர் பள்ளிகள் (Tabika Perpaduan) மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு (Taska Perpaduan) அரசாங்கம் மொத்தம் RM55.5 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. 

சிப்பாங்கில் உள்ள செரோஜா ஒற்றுமை பாலர் பள்ளியில் நடைபெற்ற ‘மாணவர்களை வரவேற்கும்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


இந்த நிதியானது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, பள்ளிச் சீருடை, புத்தகப் பை போன்ற தேவைகளை வழங்குவதன் மூலம் பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும் பகுதி, அதாவது RM24.3 மில்லியனுக்கும் அதிகமான தொகை மாணவர்களின் கூடுதல் உணவு உதவிக்காகவும் (Bantuan Makanan Tambahan), RM20 மில்லியன் தொகை சீருடை, புத்தகப் பை மற்றும் துண்டு உள்ளிட்ட ஆரம்பக் கருவிகளுக்காகவும் (Starter Kit) செலவிடப்பட உள்ளது.


மேலும், பள்ளிக் கட்டடங்களைப் பழுதுபார்த்து வசதிகளை மேம்படுத்த RM1.9 மில்லியனும், ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM3 லட்சத்திற்கும் அதிகமான தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைப் பள்ளிகள் எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகச் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


2026-ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று, நாடு முழுவதும் உள்ள 1,781 ஒற்றுமை பாலர் பள்ளிகளில் 33,307 மாணவர்களும், 41 குழந்தைகள் காப்பகங்களில் 998 குழந்தைகளும் பதிவு செய்துள்ளனர்.


இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களிடையே ஒற்றுமை, மரியாதை மற்றும் அன்பு போன்ற விழுமியங்களை சிறு வயது முதலே வளர்க்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், இளைய தலைமுறையினரைத் தேசப்பற்றுள்ள குடிமக்களாக உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமையும் என்று அவர் மேலும் சொன்னார்.




