இதுபோன்ற சாதனை முயற்சிகளையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்து வியந்திருப்போம். ஆனால், இங்கு ஒரு மருத்துவர், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ஆபரேஷன் என வரிசையாக 175 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை சுகாதாரமற்ற வகையில் செய்து மருத்துவ உலகத்தையே அலறவிட்டிருக்கிறார். பழங்குடியினப் பெண்களின் சுகாதாரத்தை கேலி கூத்தாக்கிய மருத்துவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பொதுவாக பெண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறப்பின்போது, மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையும் சேர்த்து செய்துவிடுவது வழக்கம். இதனால் புதிதாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. டியூபெக்டமி – Tubectomy எனக் கூறப்படும் இந்த அறுவை சிகிச்சையில், ஃபலோபியன் குழாய்களை கட் செய்து கிளிப் போடுவதன்மூலம், கருத்தரிப்பதைத் தடுக்க முடியும்.
இதுபோன்ற அறுவை சிகிச்சையின்போது சில பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள்கூட பரவலாக அரங்கேறியிருக்கின்றன. இந்தச் சூழலில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் 175 பெண்களுக்கு ஒரே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை அரங்கேற்றியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் அமைந்துள்ள சமூக நல மையத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றிருக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர். 30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவர் யாரும் பணியில் இல்லாததால், பாக் தொகுதி மருத்துவ அதிகாரி, தனியார் மருத்துவர் ராகேஷ் தாவரை வரவழைத்திருந்தார். ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு நிதானமாக ஆடி அசைந்து மருத்துவமனைக்கு வந்துள்ளார். வரிசையாக பெண்களை படுக்கவைத்து மயக்க மருந்து நிபுணரின் எந்தவித அறிவுறுத்தலும் இன்றி மானாவாரியாக அனஸ்தீசியா கொடுத்துள்ளனர். அதன்பிறகு ஒரு பெண்ணுக்கு 2 நிமிடம் என கணக்கு வைத்து சரசரவென ஆபரேஷனை முடித்திருக்கிறார் டாக்டர் ராகேஷ் தாவர். ஏதோ திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டுவதுபோல், ஃபலோபியன் குழாய்களை கட் செய்து பாதுகாப்பற்ற முறையில் முடிச்சு போட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
ஒரு ஆபரேஷனை முடித்து மற்றொரு ஆபரேஷனுக்கு செல்லும்போது, கையுறையை மாற்றவோ, ஆபரேஷன் செய்யும் கருவிகளை ஸ்டெர்லைஸ் செய்யவோகூட நேரம் எடுத்துக் கொள்ளாமல், அடுத்தடுத்து என சுகாதாரமற்ற வகையில் அந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களை படுக்க வைக்க படுக்கை வசதிகூட இல்லாத அந்த இடத்தில், பெண்களை திறந்த வெளியில் பெட்ஷீட்டை விரித்து தரையில் படுக்க வைத்துள்ளனர். ஒரு சில பெண்களை குப்பைத் தொட்டிக்கு அருகில் வெயிலில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவர் ஒரே நாளில் அத்தனை அறுவை சிகிச்சைகளையும் முடித்துவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.
யார் செத்தால் என்ன? பிழைத்தால் என்ன? நோய்த்தொற்று ஏற்பட்டால் என்ன? ஏற்படாவிட்டால் என்ன? என எந்தவித கவலையுமின்றி ஏதோ கின்னஸ் ரெக்கார்ட் படைக்கும் வெறியில், F1 ரேஷராக மாறி அடுத்தடுத்து ஆபரேஷன்களை அரங்கேற்றி மருத்துவ உலகத்தையே அலறவிட்டிருக்கிறார் ராகேஷ் தாவர். பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மருத்துவரிடம் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

