Last Updated:
டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு கண்மூடித்தனமான ஆதரவு, பிற நாடுகளின் மீது வெறுப்பை உமிழ்வது என அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2.52 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. எனினும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவரே முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னனி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அந்நாட்டு அரசின் திறன் துறை தலைவராகவும் இருந்து வருகிறார்.
டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு கண்மூடித்தனமான ஆதரவு, பிற நாடுகளின் மீது வெறுப்பை உமிழ்வது என அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை ஒரே நாளில், மஸ்க் 2.52 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை 28.77 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு திங்கள் கிழமை 26.24 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்க்கின் சொத்து மதிப்பு 42.37 லட்சம் கோடியாக உச்சத்தை தொட்டது. மூன்றே மாதங்களில், 11.50 லட்சம் கோடியை இழந்துள்ளார் மஸ்க். டெஸ்லா வாகனங்களின் விற்பனை குறைந்ததே இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் திறன் துறை தலைவராக மஸ்க் பதவியேற்றது முதல், ஐரோப்பிய நாடுகள் டெஸ்லா கார்களை முன்பதிவு செய்வதை கடுமையாக குறைத்தன.
Also Read: அமெரிக்காவில் 6 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை.. மருத்துவர்கள், செவிலியர்கள் ஆச்சரியம்!
ஜெர்மனி நாடு மட்டும் டெஸ்லா கார்களின் முன்பதிவை 70 சதவிகிதம் குறைத்துள்ளது. சீனாவில் 49 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில், டெஸ்லாவின் பங்குகள் 15 சதவிகித சரிவை கண்டன. 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்படும் மிகக் கடுமையான சரிவு இது. டெஸ்லா நிறுவன பங்குகளின் சரிவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், நீண்ட காலத்தில் இது சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.
டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்காவின் மகத்தான ஏழு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா, கூகுள்-ஆல்பாபெட், அமேசான் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்தன. மொத்தமாக அவை 65.37 லட்சம் கோடி ரூபாயை இழந்தன. இதனால் அமெரிக்கா பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்கிறதா என நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
March 12, 2025 7:19 AM IST