ஒரே நாளில் மாறிய வாழ்க்கை: பல ஆயிரம் கோடிகளை இழந்த டெல் நிறுவன தலைவர்..!!
பங்குகள் வளர்ச்சியும் சரிவும் ஒருவரை ஒரே நாளில் கோபுரத்திலும் அமர வைக்கும் வீழ்ச்சி அடையவும் வைக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடுமையாக சரிந்ததை தொடர்ந்து, அதன் நிறுவனரான மைக்கேல் டெல் ஒரே நாளில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
உலக புகழ்பெற்ற டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் 11.1% வரை சரிவை சந்தித்தன. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு டெல் பங்குகள் சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுவாகும். இதனால் நிறுவன தலைவர் மைக்கேல் டெல்லின் மொத்த சொத்து மதிப்பு 256.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதாவது ஒரே நாளில் 20 பில்லியன் டாலர்களை இழந்த அவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னணி நிதி நிறுவனமான பார்கிளேஸ், டெல் நிறுவனத்தின் பங்குகளை ஓவர்வெயிட் என்பதில் இருந்து ஈக்குவல்-வெயிட் என்ற நிலைக்கு தரமிறக்கியது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கிய உடனே டெல் பங்குகள் மளமளவென சரிய தொடங்கின. ஒரு பங்கின் மதிப்பு 570 டாலரில் இருந்து 460 டாலர்களாக சரிவை சந்தித்தது.
இதனால் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்துள்ள மைக்கேல் டெல்லின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சொத்து மதிப்பும் சரிந்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்கி பிரின் நான்காவது இடத்திற்கு முன்னேறினார்.
முன்னதாக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்த மெடா நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 253.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மைக்கேல் டெல்லுக்கு அடுத்ததாக ஆறாவது இடத்தில் உள்ளார். இந்த மூன்று பெரும் கோடீஸ்வரர்களுக்கும் இடையேயான சொத்து இடைவெளி 10 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
டெல் மற்றும் ஏஐ பங்குகள் சரிவால் அமெரிக்க பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. சந்தை முடிவடைவதற்கு முன்பு S&P 500 குறியீடு 1.2% , நாஸ்டாக் காம்போசிட் 1.9%, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.2% சரிவு கண்டன.
61 வயதான மைக்கேல் டெல், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டில் சில்வர் லேக் நிறுவனத்துடன் இணைந்து டெல்லை தனியார் நிறுவனமாக மாற்றினார், பின்னர் 2018 இல் மீண்டும் பொது சந்தைக்கு கொண்டு வந்து பட்டியலிட வைத்தார்.

