Last Updated:
இன்ஸ்டாகிராமில் போட்டோவை பதிவிட்டதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைகளின் நடுவில் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து முன்னாள் ஜாம்பவன், ரவிச்சந்திரன் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட் போட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில் குமரி மாவட்டம் அருவிக்கரையில் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கரையில், பறளியாறு ஓடுகிறது. பாறை கூட்டத்தின் நடுவே பரளியாற்று தண்ணீர் பாய்ந்தோடும் அழகு அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும். நீ வருவாய் என, ராமன் தேடிய சீதை, வருஷம் 16 உட்பட ஏராளமான திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. தற்போது யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அருவிக்கரைக்கு படை எடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அப்படிதான் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனும், தனது நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி வழியாக அருவிக்கரைக்கு வந்துள்ளார். அங்குள்ள பாறக்கூட்டத்தினிடையே பாய்ந்தோடும் பரளியாற்றில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்துள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பரித்து ஓடும் அருவிக்கரையில் குளித்து பலரும் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் இப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பறளியாறு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், தடையை மீறி ஆபத்தை உணராமல் நடந்து கொண்டதாகவும், அஸ்வினின் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்களும் பரளியாற்றில் பாய வாய்ப்பிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அஸ்வினை போல பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என உள்ளூர் வாசிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
June 20, 2025 6:35 PM IST


