Last Updated:
நேற்று நடைபெற்ற செவில்லா (Sevilla) அணிக்கு எதிரான லா லிகா போட்டியில் எம்பாப்பே இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை கிலியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதேபோன்று பிரான்ஸின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பேவும் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
எம்பாப்பே தற்போது ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். 2013-ஆம் ஆண்டில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரே ஆண்டில் (Calendar Year) 59 கோல்களை அடித்திருந்தார். தற்போது 2025-ஆம் ஆண்டில் எம்பாப்பே அதே 59 கோல்களை அடித்து அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செவில்லா (Sevilla) அணிக்கு எதிரான லா லிகா போட்டியில் எம்பாப்பே இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
இந்தப் போட்டி எம்பாப்பேயின் 27-வது பிறந்தநாள் அன்று நடைபெற்றது. தனது பிறந்தநாளிலேயே தனது ரோல் மாடலின் சாதனையைச் சமன் செய்தது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எம்பாப்பே கோலாக மாற்றினார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கோல் அடித்த பிறகு, எம்பாப்பே ரொனால்டோவின் புகழ்பெற்ற ‘Siuuu’ கொண்டாட்டத்தைப் பிரதிபலித்து அவருக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “எனது முன்மாதிரியும், ரியல் மாட்ரிட் வரலாற்றின் சிறந்த வீரருமான ரொனால்டோவின் சாதனையைச் சமன் செய்தது எனக்குக் கிடைத்த பெருமை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


