Last Updated:
“ஒரு மூட்டை ரூ.2500 கிடைத்தால்தான் லாபம். இல்லையெனில் நஷ்டம்” என மக்காச்சோள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவு, குறைந்த வேலை ஆட்கள் தேவை மற்றும் எளிய பராமரிப்பு காரணமாக பல பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், அத்தியூர் திருவாதி, குச்சிப்பாளையம், பேரங்கியூர், ஆலம்பாடி, வி.சித்தாமூர், முகையூர், ஆயந்தூர், சென்னகுணம், மாம்பழப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மட்டும் பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக இருக்கும் நிலையில், மற்ற பயிர்களை ஒப்பிடும்போது மக்காச்சோளம் சாகுபடிக்கு பராமரிப்பு செலவும் குறைவாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பலரும் தற்போது மக்காச்சோளம் சாகுபடியை விரும்பி மேற்கொண்டு வருகின்றனர்.
மக்காச்சோளம் பாப்கார்ன் தயாரிப்பு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் தயாரிப்பு, சத்து மாவு உற்பத்தி மற்றும் கோழி தீவன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பல நிறுவனங்கள் நேரடியாக கிராமங்களுக்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றன.
இருப்பினும், இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிக விளைச்சல் கிடைத்தாலும் அதற்கேற்ற விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், “மக்காச்சோளம் பயிருக்கு மூன்று முறை மருந்து தெளித்தால் போதுமானது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே நல்ல விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. மற்ற பயிர்களை விட குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய பயிர் இது. ஆனால் சரியான பராமரிப்பும், சந்தையில் நல்ல விலையும் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
கடந்த ஆண்டு ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1800 முதல் ரூ.1900 வரை விற்பனையானது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் ரூ.2500 முதல் ரூ.2700 வரை விலை கிடைத்தால் மட்டுமே எங்களுக்கு லாபம் கிடைக்கும். இல்லையெனில் நஷ்டம் தான். எனவே அரசு உரிய ஆதரவு விலையை நிர்ணயம் செய்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

