கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மழலையர் பள்ளியின் முதல்வராக இருந்தவர் ஸ்ரீதேவி ருடகி. 25 வயதான இவர், பள்ளியையும், மாணவர்களையும் எப்படி மேம்படுத்துவது என்பதற்கு பதில், தன்னைத் தானே விளம்பரப்படுத்துவது எப்படி என்பதையே முழு நேர வேலையாக பார்த்து வந்துள்ளார். இதனால், பகுதி நேர வேலையாக பள்ளி முதல்வர் பணியை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளையில், நவ நாகரீக ஆடைகளுடன் உலா வருவது, அவற்றை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அள்ளிக் கொட்டுவதையே வாடிக்கையாக செய்துள்ளார். இதன் மூலம், மிகவும் பிரபலமான பிரின்சிபலாக உலா வந்துள்ளார் ஸ்ரீதேவி ருடகி. இவரின், மழலையர் பள்ளியில் தொழிலதிபர் ஒருவர், தனது மூன்றாவது மகளை கடந்த 2023 ஆம் ஆண்டு சேர்த்துள்ளார். அவர் பசை உள்ள பார்ட்டி என்பதை அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தொழிலதிபரின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துள்ளார். தொடக்கத்தில் செல்போனில் ஹாய், குட்மார்னிங், குட்நைட் என இருந்த பழக்கம், நாளடைவில் தனி சேல்போன், சிம்கார்டு பயன்படுத்தும் அளவிற்கு நெருக்கமாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து டீ-ஷாப், அவுட்டிங் என்று காதல் ஜோடி போன்று உலாவியவர்கள், ஒரு கட்டத்தில் முத்தம் என்ன விலை என கேட்கும் நிலைக்கு இணக்கமாகியுள்ளனர். ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என டீச்சர் கேட்க, தொழிலதிபரோ லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளார். பிசினஸை ஒழுங்காக கவனிக்காமல் டீச்சர் பின்னால் சுற்றியதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், குடும்பத்துடன் குஜராத் செல்வதாக கூறி, தனது மகளின், மாற்று சான்றிதழை வாங்குவற்காக தொழிலதிபர் பள்ளிக்கு சென்றுள்ளார். அதுவரை குட் டீச்சராக இருந்த ஸ்ரீதேவி, பேட் டீச்சராக மாறி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். நீங்கள் எங்க வேண்டுமானாலும் போங்க, அதற்கு முன்னாடி தனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் என்று தொழிலதிபரை மிரட்டியுள்ளார். தவறும் பட்சத்தில் தன்னுடன் இருந்த போட்டோ, வீடியோக்களை உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என போங்காட்டம் ஆடியுள்ளார்.
அதைக் கேட்டு ஆடிப்போன தொழிலதிபர், திருடனுக்கு தேள் கொட்டியது போன்று வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார். பின்னர், வேறு வழி இல்லாமல் 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். முன் பணமாக 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், எஞ்சிய பணத்தை கேட்டு தனது ஆண் நண்பர்கள் கணேஷ் காலே மற்றும் சாகர் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து மிரட்டியுள்ளார். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துக் கொண்டு, அவர்கள் கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாமல், அந்த தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீதேவி ருடகி மற்றும் அவரின் ஆண் நண்பர்கள் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது மாணவியின் தந்தையிடம் நெருக்கமாக பழகி, ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
April 02, 2025 7:22 PM IST
“ஒரு முத்தம் வேணும்னா 50 ஆயிரம் ரூபாய் கொடுங்க..” தொழிலதிபரிடம் கண்டிஷன் போட்ட டீச்சர்… இறுதியில் நடந்த பகீர்!