ஒரு தொழில்நுட்பத்திற்காக ஒரு நிறுவனத்தையே வாங்கும் அமேசான்.. அதுவும் ரூ.67025 கோடிக்கு.. ஏன்!
செயற்கை நுண்ணறிவு – இந்த ஒரு தொழில்நுட்பம் தான் இனி நாம் வாங்கும் பால் பாக்கெட் முதல் தினமும் பயன்படுத்தும் நெட் பேங்கிங் ஆப் வரையில் அனைத்தையும் நிர்வாகம் செய்யப்போகிறது, இன்னும் சில பல வருடத்தில் வீட்டுக்கு ஒரு மனித வடிவிலான ரோபோ இருக்கும் வகையில் நிலைமை மாறக்கூடும் என்பதால் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை அதிகளவில் செய்து வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் நாம் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம், தற்போதைய சூழ்நிலையில் ஏஐ உள்கட்டமைப்பு தான் மிகப்பெரிய செலவாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஏஐ பயன்படுத்துவதற்கு என்விடியா சிப் தான் ஓரே இலக்கு என்ற நிலை உருவாக்கியிருக்கும் வேளையில் கூகுள், ஆப்பிள், அமேசான், எக்ஸ், மைக்ரோசாப்ட் எனப் பல நிறுவனங்கள் சொந்தமாக சிப் தயாரிக்கத் துவங்கி அதில் வெற்றிகண்டுள்ளது.

ஆனால் ஏஐ மாடல்கள் மாறுபட்ட சிபிகளைப் பயன்படுத்தும் போது தனிப்பட்ட முறையில் ப்ரோகிராமிங் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான தீர்வை Decart என்ற ஒரு ஜென் ஏஐ வீடியோ உருவாக்கும் நிறுவனம் தயாரித்துள்ளது.
Decart நிறுவனம் உருவாக்கியுள்ள AI Optimization stack மூலம் என்விடியா ஜிபியூ மற்றும் அமேசானின் Trainium3 போன்ற கஸ்டம் சிப்களில் எவ்விதமான தனிப்பட்ட ப்ரோகிராமிங் இல்லாமல் எளிதாக இயங்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இதைக் கண்டறிந்த அமேசான் இந்த நிறுவனத்துடன் 2025 முதல் இணைந்து பணியாற்றத் துவங்கி, அதன் உண்மையான திறனை உணர்ந்து சுமார் 7 பில்லியன் டாலர் தொகைக்கு மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளது. கடந்த 10-15 வருடத்தில் மிகப்பெரிய நிறுவன கைப்பற்றலாக உள்ளது.
இந்த ஒரு தொழில்நுட்பம் மூலம் அமேசான் தனது ஏஐ டேட்டா சென்டரில் என்விடியா சிப்களை மட்டுமே நம்பியிருக்காமல் அனைத்து நிறுவனங்களின் சிப்புகளையும் பயன்படுத்தி வேகமாகத் தனது கம்பியூட்டிங் பவரை மேம்படுத்த முடியும்.
இதனால் குறைந்த கட்டணத்தில் டெவலப்பர்கள் தங்களுடைய ஏஐ மாடலை இயக்க முடியும். 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சகோதரர்களான டீன் மற்றும் ஓரியன் லெய்டர்ஸ்டோர்ஃப் மற்றும் மோஷே ஷலேவ் ஆகிய மூவரும் இணைந்து துவங்கி இப்புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் கூகிள் கைப்பற்றிய WIZ நிறுவனமும் இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் தான்.
டெகார்ட் நிறுவனத்தின் இப்புதிய மென்பொருள், டெவலப்பர்களை வெவ்வேறு AI சிப்களுக்கு இடையில் மாற உதவும் காரணத்தால் என்விடியாவின் ஆதிக்கம் இல்லாமல் விலை சுமை இல்லாமல் அமேசான் நிறுவனத்தால் இயங்க முடியும். இந்த ஒரு தொழில்நுட்பம் என்விடியாவின் ஆதிக்கத்தை அடித்து நொறுக்கவும் வாய்ப்புள்ளது.

