சென்னை, படம் ரிலீஸாவதற்கு முன்பு, ஒரு டிக்கெட்டாவது விற்குமா, போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா என்ற பயம் இருந்ததாக சமந்தா கூறினார்.
‘எங்கள் தங்கம்’
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் கடந்த 19-ம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பட்ஜெட்டை எடுக்க முடியுமா?
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா, படம் ரிலீஸாவதற்கு முன்பு, “ஒரு டிக்கெட்டாவது விற்குமா, போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா?” என்ற பயம் இருந்ததாக கூறினார்.
அவர் கூறுகையில்,
“‘மா இண்டி பங்காரம்’ வெற்றி இன்னும் எனக்குள் முழுமையாக ஊறிவிடவில்லை என்றுதான் சொல்வேன். மிகக் குறைந்த பட்ஜெட்டில்தான் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்பு நாட்களை குறைக்க வேண்டும் என்பதற்காக பல கடினமான நாட்களை கடந்து உழைத்திருக்கிறோம். படம் ரிலீஸாவதற்கு முன்பு, ஒரு டிக்கெட்டாவது விற்குமா, போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா என்ற பயம் எங்களிடம் இருந்தது.
ஏனெனில், தற்போதைய சினிமாத்துறையின் நிலை அப்படித்தான் இருக்கிறது. எந்தப் படம் ஓடும், எது ஓடாது என்று யாராலும் கணிக்க முடியாது. நாம் சரியான காரணத்திற்காகத்தான் படம் எடுக்கிறோம் என்று நம்மையே நம்பி, படம் நன்றாக வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
The post “‘ஒரு டிக்கெட்டாவது விற்குமா?’ – ‘எங்கள் தங்கம்’ வெற்றிக்கு பின் சமந்தா உருக்கம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
