ஒரு சமையலறை.. 15 கோடிக்கு பிஸ்னஸ்.. யார் இந்த பெங்களூர் டீச்சர்..!
ரிட்டயர்மென்ட்க்கு பிறகாவது ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் அதன் பிறகும் தனது அசாத்திய உழைப்பால் தொழில் முனைவோராக மாறியிருக்கிறார் ஒரு பெண்மணி. பீகாரில் உள்ள பள்ளியில் சுமார் 15 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வீணா தேவி. ஓய்வுக்குப் பிறகு அனைவரும் தங்கள் வாழ்நாளை அமைதியாக கழிக்க விரும்புவார்கள்.
ஆனால் அவரோ இன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தொழில்முனைவோராக வலம் வருகிறார். பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் மாம்ஸ் மேட் (Mom’s Made) என்ற ஸ்நாக்ஸ் பிராண்டை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார்.

பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வீணா தன் மகன் சமீருடன் பெங்களூரில் வசித்து வந்தார். வேலைக்கு சென்றவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது பணியில் சேர்ந்து.. பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக வேலையை விட்டவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படித்தான் வீணாவுக்கும் இருந்தது.
தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்துவிட்டு வீட்டில் இருக்க வீணாவுக்கு பிடிக்கவில்லை. அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களும் வீட்டிலிருந்து உணவு சமைத்து விற்பனை செய்து வந்தனர். தான் மட்டும் ஏன் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்த அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதற்காக வீணா “அப்னா கிச்சன் (Apna Kitchen)” என்ற கிளவுட் கிச்சனை முதலில் தொடங்கினார். பின்னர் அதுவே மாம்ஸ் மேட் என்ற பிரபலமான பிராண்ட் உருவாக காரணமாக மாறியது. ஆரம்பத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் நம்கீன், பருப்பு சாதம் போன்ற வீட்டு முறை உணவுகளை தயாரித்து விற்பனை செய்தார்.
பிறகு சில இனிப்புகளையும் தயார் செய்தா.ர் அதற்கு ஐடியா கொடுத்ததே அவருடைய மகன் சமீர் தான். பிகாரின் பாரம்பரிய இனிப்பான தேக்குவா செய்யச் சொல்லி அவருடைய மகன் பரிந்துரைத்தார். அதன் பேரில் வீணாவும் தேக்குவா செய்து விற்பனை செய்தார். அவருடைய சமையலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் அவருக்கு 10 முதல் 20 ஆர்டர்கள் மட்டுமே வந்தன. இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு அந்த இனிப்பின் சுவை பிடித்துப் போகவே தினசரி அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வரத் தொடங்கின. இப்படி சிறிய அளவில் செய்யத் தொடங்கிய பிசினஸ் இன்று மிகப்பெரிய தொழிலாக மாறி இருக்கிறது.
தாயும் மகனும் சேர்ந்து தற்போது நாளொன்றுக்கு 1,000 ஆர்டர்கள் வரை வழங்கி வருகின்றனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் இதன் மூலம் ரூ.15 கோடி வருடாந்திர வருமானமும் பெற்று வருகின்றனர்.
வீணா தன்னைப் போலவே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்பும் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறார். தற்போது மாம்ஸ் மேட் நிறுவனத்தில் 50 பெண்களுக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் வீணாவுக்கும் சில பிரச்சனைகள் இருந்தது. வீட்டில் குடும்பத்தினருக்கு சமைக்கும் போது அளவுகள் சற்று குறைவாக இருக்கும். ஆனால் தினசரி அடிப்படையில் ஆயிரம் ஆர்டர்கள் வரும்போது பாரம்பரிய சுவை மாறாமல் இருக்க வேண்டும். இதுவே அவருக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. இதை தவிர்க்க அவருடைய அம்மா கற்றுக் கொடுத்த ஐடியாவை பின்பற்றியுள்ளார்.
இப்படி சில எஸ்ஓபி பின்பற்றி தான் வீணா அவருடைய தொழிலில் ஜெயித்துக் காட்டியுள்ளார். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்று பலர் நிரூபித்து வருகின்றனர். அப்படித்தான் இவருடைய கதையும் இன்றைய தொழில் முனைவோருக்கு உத்வேகம் அளிக்கிறது.
