Last Updated:
ஐ.நா. சபை காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடித்து வைத்திருந்த சில பிணை கைதிகளும் இஸ்ரேல் வசமிருந்த சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. அப்போது முதல் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நிவாரண பொருட்களை அனுமதிக்க மறுத்து வருகிறது. இதனால் அங்கு உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள. IPC எனப்படும் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு, 2024- ஆம் ஆண்டை ஒப்பிட்டால், காசாவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. காசாவில் வாழும் ஐந்து பேரில் ஒருவர் பட்னியால் வாடுவதாக தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு கிடங்குகள் காலியாகிவிட்டதாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ஒருவருக்கு கொடுக்கும் உணவை இருவருக்கு பகிர்ந்தளிக்கும் சூழல் உள்ளதாக கூறியுள்ளனர்.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் காசாவில் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளதாக எச்சரித்துள்ளது. காசாவில் விவசாயம் மொத்தமாக சீர்குலைந்து போயுள்ளதாகவும், போர் நிறுத்தத்தின்போது கொண்டு வரப்பட்ட உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. உலக உணவு அமைப்பால் காசாவில் நடத்தப்பட்டு வரும் அங்காடிகள் அனைத்தும் பொருட்கள் இல்லாமல் மூடப்பட்டு விட்டன. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு கிலோ தக்காளி அங்கு 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு காசாவில் ஐந்து கட்ட பஞ்ச நிலையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 10 ஆம் தேதி வரையிலான காலத்தில் 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் கடுமையான பட்டினிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளது. பஞ்சம் என்பது மிகவும் அரிதாகவே அறிவிக்கப்படுகிறது. சோமாலியாவில் 2011- ஆம் ஆண்டும், 2017- ஆம் ஆண்டு தெற்கு சூடானில் பஞ்சம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சூடானின் மேற்கு பகுதியான டார்ஃபர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பஞ்சம் என அறிவிக்கப்படுவதற்கு முக்கியமான 3 அம்சங்கள் கணக்கிடப்படும். 20 சதவிகித வீடுகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு இருந்தால் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 30 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பத்தாயிரம் பேரில் இரண்டு பெரியவர்களே, 3 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே பட்டினியால் இறந்திருக்க வேண்டும். காசாவில் செப்டம்பர் மாத வாக்கில் 4 லட்சத்து 77 ஆயிரம் பேர் அதாவது 22 சதவிகிதம் பேர் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என IPC கணித்துள்ளது. இது பஞ்சம் என அறிவிக்கப்படுவதற்கு முதல் படியாகும். ஆனால் இரு காரணிகள் அங்கு நிலவவில்லை.
ஆனாலும் காசாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பஞ்சம் என அறிவிக்கப்படுவது தாமதமானல் அதற்குள் ஏராளமானோர் உயிரிழக்க கூடும் என தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மார்ச் 2024 இல் வடக்கு காசாவில் “உடனடி” பஞ்சம் ஏற்படும் என்று IPC எச்சரித்தது, இதற்கு அடுத்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் இஸ்ரேல் உதவிப் பொருட்கள் காசாவுக்குள் நுழைய பாதைகளை திறந்து விட்டது.


