Last Updated:
கிரிக்கெட் கிரவுண்டில் பிரதானப் போட்டி நடக்கும் பிட்ச்சுக்கு அருகிலேயே வேறு சில பிட்ச்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணங்கள் என்ன?.
கிரிக்கெட் மைதானங்களில் ஒரே நேரத்தில் பல பிட்ச்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? பிரதானப் போட்டி நடக்கும் பிட்ச்சுக்கு அருகிலேயே வேறு சில பிட்ச்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒரு முக்கியப் போட்டிக்காகப் பிட்ச் தயார் செய்யப் பல நாட்கள் ஆகும். இந்தப் பிட்ச், விளையாடத் தகுந்த நிலையில் இருக்கிறதா எனப் போட்டி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். எனவே, போட்டி தொடங்குவதற்கு முன், பிரதான பிட்ச்சில் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில், பயிற்சியின்போது பிட்ச்சில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், போட்டிக்குத் தயார் செய்த உழைப்பும், ஆய்வுகளின் பலனும் வீணாகிவிடலாம்.
போட்டிக்கு வரும் வீரர்கள் வலைப் பயிற்சி செய்யாமல் இருக்க முடியாது. இந்த வலைப் பயிற்சிக்காகவே, பிரதான பிட்ச்சுக்கு அருகே வேறு சில பிட்ச்கள் தயார் செய்யப்படுகின்றன. இந்தப் பிட்ச்கள் பிரதான பிட்ச்சின் தன்மையிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும். இது வீரர்களுக்குப் பல்வேறு வகையான ஆடுகளங்களில் எவ்வாறு விளையாடி ரன் சேர்க்க வேண்டும் என்ற அனுபவத்தைக் கொடுக்கும்.
சில நேரங்களில், போட்டி நடந்துகொண்டிருக்கும்போது, பிரதான பிட்ச்சின் நிலை மோசமடைந்து, அது விளையாட உகந்ததாக இல்லை என நடுவர்கள் கருதலாம். அப்படிப்பட்ட சூழலில், இரு அணித் தலைவர்களும் சம்மதம் தெரிவித்தால், வேறு ஒரு மாற்றுப் பிட்ச்சில் போட்டியைத் தொடரலாம். வானிலை அல்லது வேறு வெளிப்புறப் பிரச்சனைகள் காரணமாகவும் மாற்றுப் பிட்ச்சை பயன்படுத்தலாம்.
எந்தக் காரணத்திற்காகவும் போட்டிகள் நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மாற்று ஏற்பாடுகளாக இந்த கூடுதல் பிட்ச்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து பல போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணைத் திட்டமிடப்பட்டிருந்தால், பிட்ச்கள் மாறி மாறிப் பயன்படுத்தப்படும். இதனால் ஒரு பிட்ச்சுக்கு ஓய்வு கிடைக்கும். ஆகவே, கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் இடர்பாடுகளைச் சமாளிக்கவும், வீரர்களின் பயிற்சிக்காகவும், போட்டித் தொடர்ச்சிக்காகவும் பல பிட்ச்கள் அமைக்கப்பட்டிருப்பது இன்றியமையாததாகிறது.







