மிர்பூர்: மிர்பூரில் நேற்று நடைபெற்ற மேஇ தீவுகள் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று மே.இ.தீவுகள் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இரு அணிகளுமே முழு நேர ஆட்டத்தில் 213 ரன்களில் முடிய சூப்பர் ஓவருக்குச் சென்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 10 ரன்களை எடுக்க வங்கதேசம் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்று தோல்வி கண்டது.
இந்த ஒருநாள் போட்டியின் வரலாற்று சிறப்பு என்னவெனில், ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மொத்தம் 100 ஓவர்களில் இரு அணிகளும் 92 ஓவர்கள் ஸ்பின் பந்து வீச்சின் மூலம் வீசியதே. இதுவரை இத்தனை ஸ்பின் ஆதிக்கம் இருந்ததில்லை. அதிலும் கூடுதல் சிறப்பு என்னவெனில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற அணி. ஆனால், நேற்று தன் முழு கோட்டாவான 50 ஓவர்களையும் ஸ்பின் பவுலிங்கை வைத்தே வீசியதுதான். இதுவும் ஒரு புதிய வரலாறாகவே கிரிக்கெட் உலகில் நேற்று நிகழ்ந்துள்ளது.
நேற்றைய போட்டியில் ஆடிய ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர், வங்கதேசத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தான். அவர் 8 ஓவர்களை வீசினார். இன்னொரு வரலாற்று நிகழ்வு என்னவெனில், வங்கதேசம் பல்வேறு வடிவங்களில் ஆடிய 813 போட்டிகளில் முதல் முறையாக ஒரு போட்டி டை என முடிந்துள்ளது.
சூப்பர் ஓவரில் 11 ரன்கள் தேவை எனும் போது, வங்கதேசம் அதை எடுக்க முடியாமல் தோல்வி கண்டது. மே.இ.தீவுகளின் இடது கை ஸ்பின்னர் அகில் ஹுசைன் தாறுமாறாக வீசினாலும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை வங்கதேசம். 4 பந்துகள் வைடும் நோபாலுமாகச் சென்றது. இடையில் சவுமியா சர்க்கார் ஆட்டமிழக்க படு மோசமான ஓவரிலும் வங்கதேசம் வெற்றி பெறத் தவறியது.
முன்னதாக முழு நேர ஆட்டம் டையில் முடிந்ததில் அருமையாக ஆடிய கேப்டன் ஷேய் ஹோப் 53 ரன்களை எடுத்ததோடு சூப்பர் ஓவரில் முக்கியமான பவுண்டரியை அடித்தார். வங்கதேச லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைன் சமீபத்தில்தான் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கையோடு இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பாடாய்ப்படுத்தினார். அவர் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
ஆட்டம் தொடங்கி முதல் ஓவரிலேயே நசும் அகமது மே.இ.தீவுகளின் பிராண்டன் கிங்கை வெளியேற்றினார். பிறகு ஆட்டம் லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைன் கையில் வந்தது. அலிக் அதான்சே (28), கேசி கார்ட்டி (35) இருவரையும் சடுதியில் பெவிலியன் அனுப்பினார். மே.இ.தீவுகளை சிதைப்பதில் தன்வீர் இஸ்லாமும் தன் பந்துவீச்சுப் பங்களிப்பைச் செலுத்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்தில் 133/7 என்று ஆனது.
அப்போது கேப்டன் ஷேய் ஹோப் அணியின் ஒரே ‘ஹோப்’ ஆக இருந்து ஜஸ்டின் கிரீவ்ஸுடன் இணைந்து 44 ரன்களைச் சேர்த்தார். ஆனால் கிரீவ்ஸ் 26 ரன்களில் ரன் அவுட் ஆக, மீண்டும் வங்கதேசம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆனால் 213 ரன்களை நோக்கி ஷேய் ஹோப் (53), அகீல் ஹுசைன் (16) முன்னேற வெற்றிக்குத் தேவை 5 ரன்களே என்று இருந்தது. அப்போது சயிப் ஹசன், அகில் ஹுசைனை வீழ்த்த கடைசி பந்தில் 3 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் நுருல் ஹுசைன் கேட்சை விட மே.இ.தீவுகளின் கேரி பியர் 2 ரன்களை எடுக்க முடிந்தது இதனால் ஆட்டம் டை யில் முடிந்தது. ஆட்ட நாயகனாக ஷேய் ஹோப் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 3வது இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

