துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 252 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இறுதிப் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறப்போவது இல்லை. தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. எது நடக்கிறதோ அது நடந்து கொண்டே இருக்கும். இறுதிப் போட்டியில் நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆட்டங்களில் செய்ததையே செய்தேன். பவர் பிளேயில் ரன்கள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் 10 ஓவர்களுக்குப் பிறகு, பீல்டிங் விரிவடைந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினமாகிவிடும்.
ஏனெனில் ஆடுகளம் ஏற்கெனவே மந்தமாக இருந்தது. இதனால் டாப் ஆர்டரில் ரன்கள் சேர்ப்பதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். 10 ஓவர்களுக்கு பிறகு எனது ஆட்டத்தை சிறிது மாற்றினேன். நீண்ட நேரம் விளையாட வேண்டியது இருந்தது. ஒரு போட்டியில் வெற்றி பெற்று அதில் நமது பங்களிப்பும் இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கிறது, அது இன்னும் சிறப்பாக இருக்கும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நான் நிறைய பங்களிப்புகளைச் செய்தேன், ஆனால் நாங்கள் வெல்லவில்லை. ஏதாவது பங்களித்து அணியை வெற்றிகரமான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் பங்களிப்பது மிகவும் முக்கியம். கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யும் இடம் குறித்து நாங்கள் விவாதித்தபோது, அவர் பேட்டிங் செய்யும் போது எவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்பது குறித்து நாங்கள் மிகவும் ஆழமாக விவாதித்தோம். அவர், நெருக்கடியை உணராதவர். மிடில் ஆர்டரில் அந்த அமைதியை நாங்கள் விரும்பினோம். மேலும், நடுவரிசையில் இடது கை பேட்ஸ்மேனை (அக்சர் படேல்) பயன்படுத்த விரும்பினோம். அது உண்மையில் எங்களுக்கு இரண்டு வழிகளிலும் வேலை செய்தது.
கே.எல்.ராகுல் பல ஆண்டுகளாக அணிக்காக நிறைய சவாலான வேலைகளைச் செய்து வருகிறார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் அவர், பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 70 முதல் 80 ரன்கள் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால் 30 முதல் 40 ரன்களும் அணிக்கு மிகவும் முக்கியம். நீங்கள் இலக்கை துரத்தும்போது, அது கடினமாக இருக்கும். ஆனால் கே.எல்.ராகுல் அங்கு இருப்பதால், அவர் தன்னை அமைதியாக வைத்திருக்கும் மனதைப் பெற்றுள்ளார் என்பதையும், அதனால் வீரர்களின் ஓய்வறையும் மிகவும் அமைதியாக இருக்கும் நாங்கள் அறிவோம்.
ஸ்யேரஸ் ஐயர், ஆட்டத்தின் நடுப்பகுதியில் மிக முக்கியமானவராக திகழ்ந்தார். அவருடன் பேட்டிங் செய்த அனைத்து பேட்ஸ்மேன்களுடனும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் விராட் கோலியுடனான அவரது கூட்டணி மிகவும் முக்கியமானது. பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் ஸ்ரேயஸ் ஐயர் அருமையான பார்ட்னர்ஷிப்களை அமைத்துக் கொடுத்திருந்தார்.
இறுதிப் போட்டியில் நான் ஆட்டமிழந்த பிறகு 50 முதல் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தேவையாக இருந்தது. இதை அக்சர் படேலுடன் இணைந்து ஸ்ரேயஸ் ஐயர் செய்தார். நிலைமைகளை புரிந்து கொண்டு இதுபோன்ற செயல் திறனை வெளிப்படுத்தும் போது நன்றாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம். ஏனென்றால் ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு பின்னால் ஆதரவாக உள்ளது. இந்த கோப்பையை வென்றது முழு அணியையும் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது, நாங்கள் அதை எங்கள் நாட்டிற்காக செய்தோம்
இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மாவின் செயல் திறன் சிறப்பானதாக அமையவில்லை. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரை இறுதி ஆட்டத்திலும் அவரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இதனால் அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஓய்வு முடிவை அறிவிக்கக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரோஹித் சர்மா.