Last Updated:
இந்தியாவுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்குப் பெருமை அளிக்கிறது
நாளை தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிரான வியூகம் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி குறித்த தனது வியூகம் பற்றி தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டி அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.
இவற்றில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. அதே நேரம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.
டெஸ்ட் போட்டி தொடரை முடித்துக் கொண்டு தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது:
இந்தியாவுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. என்னுடைய அணியில் அதிகமான மாற்றங்களைச் செய்ய நான் விரும்பவில்லை. பேட்டிங் மூலம் நான் நல்ல ரன்கள் குவிக்க வேண்டும்.
அவர்களுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்குப் புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறந்த வியூகங்களை வகுத்துள்ளோம். அவை எங்களுக்குக் களத்தில் பலன் கொடுக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
November 29, 2025 3:51 PM IST


