Last Updated:
தெற்கு லெபனானின் நபாத்தியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்
கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை நேற்று முன் தினம் (ஜூன் 18) திறந்த ஈரான் இன்று (ஜூன் 20) மீண்டும் மூடியது. லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நீரிணையை ஈரான் மூடியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோர் மின்னணு முறையில் இதில் கையெழுத்திட்டனர். இந்த ஆரம்பக்கட்ட உடன்படிக்கை இறுதி வடிவத்தைப் பெற 60 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, 14 அம்ச அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதன்படி, லெபனான் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாகக் கைவிட வேண்டும். இதற்குப் பிரதிபலனாக, ஈரானின் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து சுமார் ரூ.28 லட்சம் கோடி நிதியுதவி வழங்கவுள்ளன.
அமெரிக்கா, கத்தார் நாடுகளின் முயற்சியால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், தெற்கு லெபனானின் நபாத்தியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை நேற்று முன் தினம் திறந்த ஈரான், இன்று மீண்டும் மூடியுள்ளது.

