ஒடிசாவின் பாட்நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை பாட்நகர் முன்னாள் எம்.எல்.ஏ சரோஜ் குமார் மெஹெர் அவரது பதவிக்காலத்தின்போது திறந்துவைத்தார்.
இந்தச் சிலையை இன்று (ஏப். 15) காலை 6 மணியளவில் மர்மநபர் ஒருவர் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாட்நகர் போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜுகல் கிஷோர் சாஹு என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. மேலும், இதில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லை என்றும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிஜு ஜனதா தள கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பிஜு பட்நாயக்கை அவமதித்த பாஜக அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

