ரியோ டி ஜெனிரோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவின் பஹல்காமில் தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். இது இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பஹல்காம் தாக்குதலை கண்டித்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிரவாத அமைப்புகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயலாபம், அரசியல் லாபத்துக்காக தீவிரவாதத்தை ஆதரிப்போரை கண்டிக்காமல், தண்டிக்காமல் இருப்பது ஆபத்தானது.மேற்கு ஆசியா முதல் ஐரோப்பா வரை உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனத்தின் காசா சூழல் மிகுந்த கவலையளிக்கிறது. மனித குல நன்மைக்காக அனைத்து தரப்பினரும் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும்.
புத்தர், மகாத்மா காந்தி பிறந்த பூமி இந்தியா. நாங்கள் அன்பு, அமைதியை பரப்பிவருகிறோம். புத்தர், காந்தியின் வழியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில நாடுகள் (சீனா) சுய லாபத்துக்காக அரிய வகை தனிமங்களை ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றன. அதாவது அரியவகை தனிமங்களை குறிப்பிட்ட நாடுகளுக்கு வழங்க தடை விதிக்கப்படுகிறது. இது தவறு.பிரிக்ஸ் நாடுகள் இடையே வலுவான விநியோக சங்கிலியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2-ம் நாள் உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. அதன் நிறைவாக, பிரிக்ஸ் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிரந்தர உறுப்புநாடாக இந்தோனேசியா அங்கீகரிக்கப்படுகிறது. பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, நைஜீரியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், உகாண்டா, உஸ்பெகிஸ்தான்ஆகியவை பிரிக்ஸ் கூட்டமைப்பின் பங்குதாரர் நாடுகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் முக்கிய பங்கு வகிக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு முழுஆதரவு அளிக்கிறது. வரும் 2026-ல் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும். 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும்.
சர்வதேச அரங்கில் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கைகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஐ.நா. சபை விதிகள், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும். இனம், மதம், நாடு, கலாச்சாரம் என எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து வகையான தீவிரவாதத்தையும் பிரிக்ஸ் கண்டிக்கிறது. பஹல்காம் தாக்குதல், ஈரான் மீதான இஸ்ரேல் ராணுவ தாக்குதலை பிரிக்ஸ் வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.