தற்போது இவை அனைத்தையும்விட அதிர்ச்சியான குற்றச்சாட்டை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அவர் சொல்லியுள்ள குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகவும் அதனை செப்டம்பர் மாதம் வெளியிடுவோம் என்றும் தீர்க்கமாக சொல்லியிருப்பது இந்தியாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு சென்றுவந்தார். இதனை முதல்முறையாக நான் வெளியே சொல்கிறேன். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவர் அங்கு சுற்றுலாவுக்காக செல்லவில்லை நிச்சயம் பயிற்சி எடுப்பதற்காக சென்றுள்ளார். இது மிகவும் ஆபத்தானது.
மேலும், அவர் அங்குள்ள நிறுவனங்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். உள்துறை அழைப்பை விடுக்கிறது என்றால் பயிற்சிக்காகத்தானே இருக்கும்? வெளியுறவுத்துறையோ அல்லது பல்கலைக்கழகங்களோ அழைப்பு விடுத்தால் அது வேறு. ஆனால், இது வெளியுறவுத்துறையோ அல்லது கலாச்சாரத்துறையிடம் இருந்தோ வரவில்லை. உள்துறையின் நேரடி அழைப்பின் பெயரில் அவர் அங்குச் சென்றார்.
நாங்கள் ஆதாரங்களை பார்த்துவிட்டோம். அவருக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டது. நாங்கள் நோட்டீஸ் வழங்கியபின், தூதரகம் எங்களுக்கு ஆவணங்களை வழங்கும். அனைத்து ஆதாரங்களும் செப்டம்பர் 10ஆம் தேதி பொதுமக்கள் முன் வைக்கப்படும். அதுவரை இது தொடர்பான கேள்விகளை மீண்டும் கேட்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
அசாம் முதல்வரின் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தனது எக்ஸ் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அசாம் மாநில முதல்வரின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன். அவருக்கு மிகவும் பரிச்சயமான ஏதோ ஒரு காரணத்தினால், நான் அசாமில் நுழைந்ததிலிருந்து அவரது கண்காணிப்பில் இருக்கிறேன். கடந்த 13 ஆண்டுகளில் அவர் என்னைப் பற்றி பல அடிப்படையற்ற கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சமீபத்திய கருத்து பைத்தியக்காரத்தனம் மற்றும் அபத்தத்தின் எல்லையைக் கொண்டது.
வீட்டில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், அது அந்த நபரின் மனநிலையில் பிரதிபலிக்கும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. 2026 க்குப் பிறகு அவர் சிறிது ஓய்வு பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். இரண்டாம் தரத் திரைப்படங்களை விட மோசமான கதையை முதல்வர் பின்பற்றுகிறார். ஒரு பொய்யை மறைக்க ஒருவர் எண்ணற்ற பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கும் என சொல்வார்கள். அதைத்தான் முதல்வர் செய்கிறார். அவர் எந்த உண்மையையும் வெளியிடாமல் ஏதோ ஐ.டி. செல் போல் ஏனோதானோ என நடந்துகொள்கிறார்.
I am worried about the health of the Chief Minister of Assam.
For some reason best known to him I have been on his radar since my entry into Assam. He has made many baseless remarks about me in the past 13 years. The most recent one borders on insanity and the absurd.It is…
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) May 18, 2025
ஒரு முதல்வர் ஏனோதானோ என இருக்கக்கூடாது. அவரது சமீபத்திய குற்றச்சாட்டிற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதனை பொதுவெளியில் வெளியிட வேண்டும். இந்த கேலிக்கூத்தை அதிக காலம் மறைக்க முடியாது. முதல்வர் சொல்லிக் கொண்டிருப்பதில் 99% முட்டாள்தனமானது. அவர், செப்டம்பர் மாதம் காலக்கெடு எனும் கற்பனையின் பின் ஒளிந்து கொள்வதை நிறுத்திவிட்டு, ஆதாரங்களை பொதுவெளியில் தர வேண்டும். செப்டம்பரில் கூட முதலமைச்சரால் உறுதியான உண்மைகளை வெளியிட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
அசாமில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராகுல் காந்தியின் ‘உடல் இரட்டையர்’ என்று கூறப்படுவதைப் பற்றி அவர் எப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, மாநிலத்தின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் பாதுகாப்பின் கீழ் நடத்தப்படும் நிலக்கரி-மருந்து மாஃபியா குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் மீது, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இப்படியான பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதும், எம்.பி. கௌரவ் கோகோய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஐ.எஸ்.ஐ. அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்ற காங்கிரஸ் எம்பி” – அசாம் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

