பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் பல ஆண்டுகளாக வற்புறுத்தியது அவருக்குப் பலனளித்தாலும் கூட, அமெரிக்க வாக்குறுதிகள், பாதுகாப்பு அம்சங்களை அவர் கைவிட்டது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான் டெர் லேயனின் இந்த புதிய திட்டம், உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கும் திறனை வழங்கவும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பு நிதிகளைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த அனுமதிக்கவும், பணப் பற்றாக்குறை உள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை விரைவாக அதிகரிக்கவும் உதவும்.

லண்டனில் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த மாநாட்டில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், உக்ரைனுக்கு அமெரிக்க உதவி நிறுத்தப்பட்ட நிலையில் அந்நாட்டை ஆதரிப்பதற்கும், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான குறைந்த முதலீட்டை சரிசெய்வதற்கும் இந்த நிதி அதிகரிப்பை ஆதரித்தன.
இதே போன்றதொரு அறிவிப்பை ஜெர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸும் வெளியிட்டு, “ஜெர்மனியும் ஐரோப்பாவும் சுதந்திரத்துக்கு தயாராக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேநேரம் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் தொடர்ந்து ட்ரம்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதற்கான காரணம், ஐரோப்பா மற்றும் நேட்டோவிலிருந்து அமெரிக்கா தனது ஆதரவை முழுமையாக விலக்கிக் கொள்வதன் மூலம் காணாமல் போகக்கூடிய பாதுகாப்பு திறன்களை மீண்டும் பெற ஐரோப்பாவுக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இது ஐரோப்பாவுக்கு பெரும் தலைவலி. அது இந்த ஆண்டு கோடைக்காலத்துக்குள் இந்த தலைவலி உண்மையாகும் என்பதே அவர்களது அச்சம்.
பால்டிக் நாடுகள் போன்ற சிறிய நாடுகளுக்கும் இது மிகவும் கவலைக்குரிய விவகாரம். காரணம், அவை எதிர்காலத்தில் ரஷ்ய ஆக்கிரமப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று தற்போது பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவத்தையே நம்பியுள்ளன.