Last Updated:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருடப்பட்ட 475 கிராம் தங்கம் கர்நாடகாவில் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள நகைக் கடையில் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த 475 கிராம் தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் பொட்டி மற்றும் சபரிமலை கோயிலின் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு கைது செய்யப்பட்டனர்.
துவார பாலகர் சிலையில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கோவர்தன் என்ற நகை வியாபாரியிடம் விற்பனை செய்யப்பட்டதாக உன்னிகிருஷ்ணன் பொட்டி வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து உன்னிகிருஷ்ணனை பெல்லாரிக்கு அழைத்து சென்று சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அங்கு கோவர்தனுக்கு சொந்தமான நகைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த தங்கம் சபரிமலை கோயில் நகையா என்று ஆய்வு செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதேபோன்று பெங்களூருவில் உள்ள உன்னிகிருஷ்ணன் வீட்டிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பித்துத் தந்ததாகக் கூறப்படும் சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவனத்திலும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது நகைக் கடையில் இருந்து தங்கம் எதுவும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைப்பற்றப்படவில்லை என்று கோவர்தன் தெரிவித்துள்ளார்.
October 25, 2025 6:58 PM IST


