Last Updated:
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது பயிற்சி குழுவில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. நீண்ட காலமாகத் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா, புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
மோஹித் சர்மாவின் நியமனத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானின் பரிந்துரையின் பேரிலேயே மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரராகச் சிஎஸ்கே அணிக்காகச் சிறப்பாகப் பங்காற்றிய மோஹித் சர்மா, இந்தப் புதிய பொறுப்பிலும் மிகச் சிறந்த முறையில் செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஜாகீர் கானின் ஆலோசனையின்படி அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில உதவிப் பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள 38 வயதான மோஹித் சர்மா, எம்.எஸ். தோனியின் தலைமையில் 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவராகப் ஜொலித்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 2014-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ‘பர்ப்பிள் கேப்’ (Purple Cap) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


