Last Updated:
ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக புதிய பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது
ஐபிஎல் 2027 சீசனை எதிர்நோக்கித் தயாராகி வரும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் (Coaching Staff) அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அணியின் நட்சத்திரப் பந்துவீச்சுப் பயிற்சியாளரான இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா (Lasith Malinga), கூடுதல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரஸ் மாம்பரே (Paras Mhambrey) மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன் (Carl Hopkinson) ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் வீரராகப் பல வரலாற்று வெற்றிகளைத் தேடிக் கொடுத்த அவர், அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு முதல் பந்துவீச்சு ஆலோசகராகவும் (Bowling Mentor), ஷேன் பாண்டுக்குப் பிறகு 2024 சீசன் முதல் முதன்மை வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். அதேபோல், பரஸ் மாம்பரே 2025 சீசனின் போதும், கார்ல் ஹாப்கின்சன் கடந்த மூன்று ஆண்டுகளாக பீல்டிங் பயிற்சியாளராகவும் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்துள்ளனர்.
இந்த மூவரின் விலகல் குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் அணியின் வெற்றிக்குப் பங்களித்த லசித் மலிங்கா, பரஸ் மாம்பரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் உருவாக்கிய நினைவுகளும் பிணைப்புகளும் எப்போதுமே எங்களது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளராக இருந்த மகேலா ஜெயவர்த்தனேவுக்குப் பதிலாக, நட்சத்திர வீரர் கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) தலைமைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த பயிற்சியாளர் குழுக் கட்டமைப்பு மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக புதிய பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட புதிய ஆதரவுக் குழுவில் (Support Staff) சச்சின் டெண்டுல்கர் (ஐகான்), கீரோன் பொல்லார்ட் (தலைமைப் பயிற்சியாளர்), ஜூபின் பருச்சா (செயல்திறன் இயக்குனர்), ராகுல் சங்வி (கிரிக்கெட் இயக்குனர்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அதிரடி மாற்றங்கள் அணிக்கு எந்த மாதிரியான திருப்புமுனையைத் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


