Last Updated:
கேகேஆர் அணிக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஒரு மாற்று வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேசத்தை சேர்ந்த பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் விலகியுள்ளார். பிசிசிஐ அறிவுறுத்தலை தொடர்ந்து அவரை அவர் விலக்கி கொல்கத்தா அணி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில், முஸ்தபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது. ஆனால், இன்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, முஸ்தபிசுரை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
பிசிசிஐ-யின் அறிவுறுத்தலை ஏற்று, முஸ்தபிசுர் ரஹ்மானை ஒப்பந்தத்திலிருந்து விடுவிப்பதாக கேகேஆர் நிர்வாகம் தனது செய்தி அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து சமூகத்தினருக்கு எதிராக சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அத்தகைய சூழலில் வங்கதேச வீரர் ஒருவர் இந்தியாவில் விளையாடுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது ஐபிஎல் தொடரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பிசிசிஐ கருதியது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டால் அது ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால், பிசிசிஐ முன்கூட்டியே இந்தத் தடையை விதித்துள்ளது.


