ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ உறுதி செய்துள்ள நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெறுவதை குறிப்பிட்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு உலகம் முழுவதும் இருந்தும் 1574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி மொத்தம் 574 வீரர்களை தேர்வு செய்துள்ளது.
இவர்களில் 366 பேர் இந்தியாவையும் மற்ற 208 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். இந்த மெகா எலத்தின் போது ஒட்டுமொத்தமாக 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 70 வீரர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இதற்கிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி 26 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் வர்ணனையாளராக ஒப்பந்தமாகியுள்ளனர். அதே நேரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற உள்ளதால், அதிலும் அவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதேபோன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் உள்ளார். இந்நிலையில் ஒரே நேரத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஐபிஎல் ஏலம் நடைபெறுவதை சுட்டிக்காட்டி ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இரு நிகழ்வும் மிகவும் முக்கியமானது. ஆனால் இரண்டிலும் முழுமையாக நம்மால் பங்கேற்க முடியாது. ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியும் மெகா ஏலமும் நடைபெறுகிறது. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் முடிந்த பின்னர் ஐபிஎல் ஏலம் தொடங்கும் என்று எல்லோரும் நினைத்திருந்தோம்.
ஆனால் எதற்காக இந்த தேதியை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் முதல் நாள் அன்று நான் கமெண்டரி செய்வேன். அதன்பின்னர் ஐபிஎல் ஏலத்திற்காக உடனடியாக வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு ஜெத்தா சென்று விடுவேன். ஏலத்தை பொறுத்து நான் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது அமையும் என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
