Last Updated:
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பஞ்சாப்பில் நடந்த போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பதற்ற நிலை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் பரஸ்பரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு, அணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசித்து போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போட்டிகளை மீண்டும் தொடங்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்ட மைதானங்களில் நடைபெறுமா அல்லது பாதுகாப்பு காரணமாக தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
May 11, 2025 11:20 AM IST


