Last Updated:
அமெரிக்காவின் NFL தொடருக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.
முன்னணி சர்வதேச முதலீட்டு வங்கியான ‘ஹூலிஹான் லோகி’ (Houlihan Lokey) தனது 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் தொழில் முனைவு மதிப்பு கடந்த ஆண்டை விட 11.4% உயர்ந்து 20.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 1.97 லட்சம் கோடி) எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
உலகளவில் போட்டிகளின் கணக்கீட்டின்படி, அமெரிக்காவின் NFL தொடருக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): 300 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்பைத் தாண்டிய முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையுடன், 312 மில்லியன் டாலர் (16% உயர்வு) மதிப்புடன் ஐபிஎல் தொடரின் மிக மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் (MI): தொடரில் 9-வது இடத்தைப் பிடித்தபோதிலும், தனது 5 சாம்பியன் பட்டங்களின் பின்னணியால் 264 மில்லியன் டாலர் (9.1% உயர்வு) மதிப்புடன் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): 2024 பட்டத்தின் வெற்றி மற்றும் வலுவான வணிக ரீதியான பங்களிப்புகளால் 245 மில்லியன் டாலர் (7.9% உயர்வு) மதிப்புடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் எதிர்பார்த்த அளவு சோபிக்காததாலும், எம்.எஸ். தோனியின் களம் சார்ந்த பங்கேற்பு குறைந்ததாலும் வளர்ச்சி சற்று மந்தமடைந்து, 244 மில்லியன் டாலர் (3.8% உயர்வு) மதிப்புடன் நான்காம் இடத்திற்குச் சரிந்துள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (168 மில்லியன்) 5-ஆம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (161 மில்லியன்) 6-ஆம் இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் (158 மில்லியன்), குஜராத் டைட்டன்ஸ் (157 மில்லியன்), டெல்லி கேபிடல்ஸ் (156 மில்லியன்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (122 மில்லியன்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


