Last Updated:
சிஎஸ்கே அணியின் ஸ்பான்சராக புல்கிட் ஸ்டீல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார். 17ம் தேதி சேப்பாக்கத்தில் பயிற்சி தொடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 17ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்குவார்கள் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.
ஐபிஎல் 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு சீசன்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக (Strength Sponsor) புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ‘புல்கிட் ஸ்டீல்ஸ்’ நிர்வாக இயக்குனர் வினோத் கார்க் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கார்க் கூறுகையில், “சிஎஸ்கே அணியின் வலிமை மற்றும் நம்பகத்தன்மை எங்களது பிராண்ட் கொள்கையோடு ஒத்துப்போகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை எளிதில் சென்றடைவோம்” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “தோனி விளையாடுவாரா என்பதை எல்லாம் அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் இணைந்து முடிவு செய்வார்கள். எனக்கு தெரிந்து நிச்சயமாக விளையாடுவார். சேப்பாக்கம் மைதானத்தில் 17ம் தேதிக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் உலக கோப்பையில் விளையாடியது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐபிஎல்லில் இன்னும் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் விக்கெட் மிகவும் நன்றாக உள்ளது. இனி வரும் போட்டிகளில் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


