Last Updated:
பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜக கூட்டத்தில், ஐந்து மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வியூகம் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பரபரப்பாக இயங்கிவருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களை எதிர்க்கொள்வதற்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி தேர்தல் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தீவிரமாக பணியாற்றிவருகிறது பாஜக. அதேசமயம், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போராடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


