கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகை லட்சுமி மேனன் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கொம்பன், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தனது மார்க்கெட்டை இழந்தவர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.
இதற்கிடையே மீண்டும் கேரளா சென்ற நடிகை லட்சுமி மேனன், தற்போது ஆட்கடத்தல் வழக்கில் காவல்துறையினர் தேடும் வழக்கில் சிக்கினார். 27 வயதே ஆன நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்களான மிதுன், அனீஷ் உள்ளிட்டோருடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அப்போது அதே பாருக்கு மது அருந்த வந்த மற்றொரு கும்பலுக்கும், லட்சுமி மேனனின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் மாறி மாறி ஆவேசத்தைக் காட்ட, எதிர் தரப்பினர் பல பேர் முன்னிலையில் நடிகையையும், அவரது நண்பர்களையும் எதிர்த்து நின்றதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த நடிகையின் நண்பர்கள், பார் மூடும் நேரம் பார்த்து காரில் புறப்பட்டுச் சென்ற அக்கும்பலை, பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சிட்டி கார்னர் இடத்தில் வைத்து அந்தக் காரை மறித்த நடிகையின் நண்பர்கள், அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரைக் கடத்திச் சென்று வலுவாக தாக்கியுள்ளனர்.
சாதாரண பிரச்சினையை பெரிதாக்கி, ஆட்கடத்தல் வரை வில்லங்கமாக்கியதுடன் அடிதடி வழக்கிலும் சிக்கும் அளவுக்கு குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ஐடி ஊழியர், அவரது நண்பர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்த கையோடு எர்ணாகுளம் காவல்நிலையத்திலும் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாரில் நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் யார் மீது தவறு? என பார் ஊழியர்களை தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர். அதன் பின்னர் லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய 3 பேரையும் எர்ணாகுளம் வடக்கு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கின் உச்சக்கட்டமாக ஐடி ஊழியரை காரில் கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனனையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் நண்பர்களை போலீசார் கைது செய்திருப்பது தெரிந்து, நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார். செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மாயமானவர் எர்ணாகுளம் போலீசாரால் தேடப்பட்டுவந்தார். ஐடி ஊழியரை காரில் கடத்தி தாக்கும் போது உடன் நடிகையும் இருந்துள்ளார் என்பது உறுதியாகிய நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
August 27, 2025 6:27 PM IST
ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு; முன் ஜாமீன் கோரி நடிகை லட்சுமி மேனன் வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

