Last Updated:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணித்தால் வங்கதேச அணியின் நம்பகத்தன்மை குறைந்துவிடும்.
இந்தியாவுடன் மோதல் காரணமாக வங்கதேச கிரிக்கெட் அணி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருக்கிறது. இந்தத் தொடருக்கு பல மாதங்களுக்கு முன்பே போட்டிக்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசம் எடுத்துள்ள முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்தால் அந்த அணிக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என ஐசிசி விதிகள் கூறுகின்றன. தற்போது வரை வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை உறுதி செய்யவில்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, அந்த நாட்டு அணியின் பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்த அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன்படி அந்த அணி இந்தியாவில் வந்து விளையாட மறுத்தால், அந்த அணியின் புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும்.
வங்கதேசம் தற்போது சி பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. அதனுடன் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் இடம் பெற்றுள்ளன. வங்கதேசம் விளையாடும் போட்டிகளில் புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் போது, அது மிகப் பெரிய பாதிப்பை வங்கதேசத்திற்கு ஏற்படுத்தி லீக் சுற்றிலேயே வெளியேற நேரிடும்.
மேலும் ஐசிசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் சரியான காரணம் இல்லாமல் ஒரு நாடு போட்டியிலிருந்து விலகினால், அந்த அணிக்கு மிகப்பெரிய அபராதத்தை ஐசிசி விதிக்கலாம். மிகக் கடுமையாக விதி மீறலில் ஈடுபட்டால், அந்த நாட்டுடைய உறுப்பினர் அங்கீகாரத்தையே ஐசிசி ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று வங்கதேச அணி இந்தியாவிற்குள் வந்து விளையாட விட்டால், அதனால் அந்த அணியின் வீரர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். வீரர்களுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான கட்டணம் மற்றும் ஊக்கத்தொகை கிடைக்காது.
இதேபோன்று ஐபிஎல் போன்ற சர்வதேச போட்டிகளில் வங்கதேச வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்படும் நிலைமை உருவாகும். இதேபோன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணித்தால் வங்கதேச அணியின் நம்பகத்தன்மை குறைந்துவிடும். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அள்ளித் தொடர்களில் வங்கதேச அணியை ஐசிசி சேர்க்காமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.


