துபாய்: 8 அணிகள் கலந்து கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகவும், நியூஸிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா (ரன்கள் 263, விக்கெட்கள் 3) தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டரான நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திராக தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் மற்றொரு தொடக்க வீரராக தேர்வாகி உள்ளார். அவர், ஒரு சதத்துடன் 216 ரன்கள் சேர்த்திருந்தார். விராட் கோலி (ஒரு சதம் உட்பட 218 ரன்கள்) 3-வது வீராகவும், 4-வது வரிசையில் ஸ்ரேயஸ் ஐயரும் (243 ரன்கள்), விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுலும் இடம் பெற்றுள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, மேட் ஹென்றியும் தேர்வாகி உள்ளனர். சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார். அக்சர் படேல் 12-வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை.
ஐசிசி அணி விவரம்: ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து), இப்ராகிம் ஸத்ரன் (ஆப்கானிஸ்தான்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (இந்தியா), கிளென் பிலிப்ஸ் (நியூஸிலாந்து), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்), மிட்செல் சாண்ட்னர் (நியூஸிலாந்து), முகமது ஷமி (இந்தியா), மேட் ஹென்றி (நியூஸிலாந்து), வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் (இந்தியா).