Last Updated:
அமெரிக்கா, இஸ்ரேலுடனான விரோதத்தை தீர்க்க துபாய், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதலால் அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், துபாய், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி அழித்ததாகவும் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்று குவித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தை தாக்கி அழித்த ஈரான், குடியிருப்பு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.
மேலும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜுமைரா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், கத்தாரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஈரானின் ஏவுகணை விழுந்து நொறுங்கியது.
இதனிடையே, உலகளவில் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 கோடியே 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் சவுதியில் 2 கோடியே 45 லட்சமும், குவைத்தில் ஏறத்தாழ 10 லட்சம் இந்தியர்களும் வசிக்கும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் பணியில் இந்திய தூதரகங்கள் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக கைவிட வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்… அச்சத்தில் மக்கள்!


