ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சி வழக்கம் போல் அன்றும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹு குறைகேட்பு விசாரணை அமர்வில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் சுமார் 5 பேர் கும்பல் திமுதிமுவென நுழைந்துள்ளது. அவர்களுடன் மாநகராட்சி உறுப்பினர் ஜிபன் பாபு என்பவரும் உடன் இருந்தார்.
திகைத்துப் போன ரத்னாகர், வரிசையில் வாருங்கள் ஒவ்வொருத்தராக தங்களது குறைகளை கூறுங்கள் எனக் கூறியிருக்கிறார். அப்போது ஜிபன் பாபு தயங்கி தயங்கி ‘ஐயா, நீங்கள் ஜகா பாயிடம் ஏதாவது சொன்னீர்களா? நீங்கள் அவரிடம் தவறாக நடந்து கொண்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.
ஒடிசா மாநில பாஜக தலைவரான ஜெகநாத் பிரதானைத் தான் அவரது ஆதரவாளர்கள், ஜகா பாய் என அழைக்கின்றனர். ஜகாபாயிடம் தனக்கு எந்த விரோதமும் இல்லையே என நினைத்த அதிகாரி ரத்னாகர், அப்படி ஒன்றும் இல்லையே, அவரிடம் நான் தவறாக எதுவும் நடக்கவில்லையே எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் அவரது பதிலை கேட்கக் கூடிய நிலையில் இல்லாத அந்த 5 பேர் கும்பல், அதிகாரி ரத்னாகரை பிடித்து தரதரவென அலுவலகத்தை விட்டு வெளி இழுத்துச் சென்றனர். அப்படி இழுத்துச் செல்லும் போதே அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். அந்த கும்பல் அவரை வாகனத்தில் ஏற்றி கடத்த முயற்சித்தது.
ஆனால் பலரும் தங்களது செல்போனில் அந்த காட்சிகளை பதிவு செய்ததால் தாக்குதல் நடத்தி விட்டு சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவரான ஜெகநாத் பிரதான் காரணம் என நினைத்திருந்த நிலையில், அவரும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் பெரும் போராட்டத்தில் இறங்கினர். கடந்த திங்கள் கிழமை இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், செவ்வாய் கிழமை முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரியை தாக்கியதைக் கண்டித்து அதற்கு காரணமான 5 பேர் மற்றும் ஒடிசா மாநில பாஜக தலைவர் ஜெகநாத் பிரதான் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒடிசா பாஜக தொண்டர்கள் 5 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் பாஜக தலைவர் ஜெகநாத் பிரதான் மட்டும் கைதாகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை தனது தொண்டர்களுடன் காவல்நிலையம் சென்ற அவர், போலீசாரிடம் சரணடைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தனது கைதால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்றால் தான் சரணடைந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகக் கூறினார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
Odisha (Orissa)
July 05, 2025 9:05 AM IST