Last Updated:
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பில்கேட்ஸ், உலகம் முழுவதும் உதவிகளை வழங்கிவரும் ஏஜென்சியான US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த உதவியை எலான் மஸ்க் சமீபத்தில் நிறுத்தியதை விமர்சித்துப் பேசினார்.
அடுத்த 20 ஆண்டுகளில் தன்னுடைய சொத்தில் 99 சதவீதத்தை பொதுமக்களுக்கு வழங்க இருப்பதையும், 2045ஆம் ஆண்டிற்குள் கேட்ஸ் அறக்கட்டளை அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதையும் அறிவித்த மைக்ரோசாப்ட் ஃபவுண்டர் பில்கேட்ஸ் அவர்கள், ஏழை குழந்தைகளைக் கொன்று வருவதாக சொல்லி எலான் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபைனான்சியல் டைம்ஸ் உடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பில்கேட்ஸ், உலகம் முழுவதும் உதவிகளை வழங்கி வரும் ஏஜென்சியான US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த உதவியை எலான் மஸ்க் சமீபத்தில் நிறுத்தியதை விமர்சித்துப் பேசினார். இதன் விளைவாக மீசில்ஸ், HIV மற்றும் போலியோ போன்ற நோய்கள் மீண்டும் அதிக அளவில் ஏற்படுவதற்கு எலான் மஸ்க் காரணமாக இருக்கப் போவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர், இந்த உலகத்திலேயே ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளை கொல்வது என்பது நல்ல விஷயம் கிடையாது” என்று கேட்ஸ் ஃபைனான்சியல் டைம்ஸ்க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். “எலான் மஸ்க் US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த பணத்தை நிறுத்தியதன் விளைவாக தற்போது HIVயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, 69 வயதான இவர், மீதம் இருக்கக்கூடிய தன்னுடைய சொத்தை அடுத்த 20 வருடங்களில் லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளைகளுக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 31, 2045க்குள் இவருடைய அறக்கட்டளை அதன் செயல்பாடுகளை நிறுத்தும் என்றும் ஒரு பதிவில் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். “நான் இறந்த பிறகு இந்த உலகம் என்னைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம். ஆனால், இவர் ‘பணக்காரராகவே இறந்துவிட்டார்’ என்று மட்டும் என்னை யாரும் கூறி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார். “மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த உலகில் தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகள் உள்ளன. இதன் காரணமாக நான் முன்னதாக திட்டமிட்டதைவிட இந்த சமூகத்திற்கு என்னுடைய பணத்தை இன்னும் விரைவாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கேட்ஸ் கூறியபடி அவருடைய அறக்கட்டளை ஏற்கனவே $100 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை நன்கொடையாக வழங்கிவிட்டது. மேலும், அடுத்த 20 வருடங்களில் 200 பில்லியன் டாலர்களை செலவிடுவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறினார். தாய் மற்றும் பிள்ளைகளை கொல்லக்கூடிய நோய்களை தடுப்பது, மலேரியா மற்றும் மீசில்ஸ் உட்பட தொற்று நோய்களை நீக்குவது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வறுமையைப் போக்குவது ஆகிய மூன்று முக்கியமான இலக்குகள் தன்னுடைய அறக்கட்டளைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ப்ளூம்பெர்க்ஸ் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்படி, கேட்ஸ் 168 பில்லியன் டாலர் மதிப்புகளுடன் உலகின் 5வது மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார்.
“நீங்கள் பிறந்த இடம் ஒருபோதும் உங்களுடைய வாய்ப்புகளை நிர்ணயிக்கக்கூடாது என்ற அடிப்படையான யோசனையைக் கொண்டே கேட்ஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது” என்றும் அவருடைய பதிவில் கேட்ஸ் எழுதி இருந்தார். “இந்த உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஆரோக்கியமான முறையில், மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இந்த உலகை நகர்த்திக் கொண்டிருக்கும் எங்களுடைய அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நினைத்தால், எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.


