புதுடெல்லி:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். மேலும், ஆகஸ்ட் 31 அன்று சீன அதிபர் ஸ்இ ஜின்பிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் இந்த இருநாள் உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குப் பிறகு அமெரிக்கா–இந்தியா உறவுகள் மங்கியுள்ளன என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா விமர்சனங்கள் எழுப்பி வருகிறது.
இந்த சூழலில், பிரதமர் மோடியும் அதிபர் ஸ்இ ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது சர்வதேச சமூகத்தின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் பதட்டம் நிலவியது. அதன் பின்னர் இரு நாடுகளும் உறவுகளை சீரமைக்க தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் இந்தியா–சீனா இடையேயான நேரடி பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.