தாய்லாந்து தீவான பூகெட்டில் (Phuket) இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறங்கியதாக பூகெட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று ஜூன் 13 நடந்த இந்த சம்பவத்தில், அவசரகாலத் நடவடிக்கையாக விமானம் AI 379 இல் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் விமானத்தில் எந்தவித வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த விமானம் காலை 9.30 மணிக்கு ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.
ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வட்டமடித்த விமானம், காலை 11.38 மணிக்கு தாய் தீவில் மீண்டும் தரையிறங்கியதாக Flightradar24 தெரிவித்தது.
இதில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விமானத்தின் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை பயணி ஒருவர் எடுத்து தகவல் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

