Last Updated:
இன்னிங்ஸின் இறுதியில் ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியில் மிரட்டினார். அவர் வெறும் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் முதலாவது விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடித் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 10 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ரையன் ரிக்கெல்டன் ரன் ஏதுமின்றியும் கோல் மெக்கான்கி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது.
கேப்டன் எய்டன் மார்க்ரம் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் நிதானமாக விளையாடி 27 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்து அணிக்கு ஓரளவு வலுசேர்த்தார். அனுபவ வீரர் டேவிட் மில்லர் 6 ரன்களில் ஏமாற்றமளித்தாலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டரில் கைகொடுத்தார்.
இன்னிங்ஸின் இறுதியில் ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியில் மிரட்டினார். அவர் வெறும் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்


